தயாநிதி மாறன பதவி விலகியது பற்றி செய்தியாளர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கேள்வி கேட்ட பொழுது “இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல”என்று கூறியது நகைச்சுவையாக உள்ளதுதனது பேரன் தயாநிதி மாறன பதவி விலகியதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று கருணாநிதி நேரடியாக குற்றம் சாட்டுகிறார். கலைஞர் இப்படி குற்றம் சாட்டுவது முதல் முறை அல்ல .இதற்க்கு முன்பும் நிறைய தடவை இந்த மாதிரி குற்றம்சாட்டி உள்ளார்.
தயாநிதி பற்றி ஊடகங்களில் வரும் செய்திகள் கடந்த ஆறு வாராமாக தான் வருகிறது .ஆனால் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்க தன் அதிகாரத்தை பயன்படுதியது 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தோடு தொடர்புடையதாகும். அப்பொழுதெல்லாம் இவரது குடும்ப ஊடகங்களை வைத்து என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இவருக்குத் தெரியாதா? எத்தனையோ பிரச்சனைகளை உங்கள் டீவிகளில் போட்டு ஊதி ஊதி குளிர்காய்ந்தீர்களே, உங்கள் பேரன்கள் எடுக்கும் குப்பை படங்களைக்கூட டீவியில் விளம்பரம் செய்து செய்து ஓட்டி காசு பாத்தீர்களே, அப்போது வராத இந்த கோபம இப்ப மட்டும் ஏன் ஊடகங்கள் மீது வந்தது? குடும்பப்பாசம் கண்ணை மறைக்குதோ? தன் குடும்பத்திற்குள், சொத்தையும் கட்சியையும் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகளை தமிழ்நாட்டில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒளிபரப்பியது நாறடித்தது சன் டிவி தான் என்பது கலைஞருக்கு வேண்டுமென்றால் மறந்திருக்கலாம், மக்களும் மறந்துவிடுவோமா என்ன?
ஆனால் இப்போதும் உண்மை எதுவென்றால் தயாநிதி மாறன் பிரச்சனையோ, ஸ்பெக்ட்ரம் பிரச்சனையோ, ஊடகங்களால் உருவாக்கப்படவில்லை. இது சாதாரண மக்களுக்கும் புரியும் .2G அலை கற்றையின் ஊழல நாயகன் ராசா என்று தன்னை ஊடகங்கள் வர்ணிப்பதை பொருக்க முடியாத தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா ஒரு உண்மையை கூறினார். “எந்த வழிமுறைகளை பின்பற்றி எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை செய்தார்களோ அதே வழியைத்தான் நானும் கடைபிடித்தேன” என்று கூறினார். அதுதான் தயாநிதி மாறனுக்கு வினையானது.
உண்மையில் கலைஞரின் ஆதங்கம் வேறு! அவர் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்துங்கள். “ஊடகங்கள் நினைத்தால” என்று அவர் கூறுவதற்குக் காரணம், தனது கட்சியினரின் ஊழலை மட்டுமே இந்த ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன” என்பதே அவருடைய ஆதங்கம். “நாட்டில் பல ஊழல்கள் நடந்து இருக்கிறது அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறீர்கள், எங்களை மட்டும் பெரிதாக ஊடகங்கள் சித்தரிகின்றன என்பதுதான் அவர் கோபம் என்று அவருடைய வார்த்தைகளில் தெரிகிறது. ஆனால், உங்களுக்கு நெருங்கியவர்கள் வேண்டுமென்றே கசியவிடும் ஆதாரத்தைக் கொண்டு நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிப்பது குற்றமா? இதே வேலையை உங்கள் குடும்ப தொலைக்காட்சிகள் முன்பு செய்யவில்லையா? ஆதாரங்களைக் கசியவிட்டவர்களிடம் அல்லவா நீங்கள் கோபப்பட வேண்டும்? அதைவிட்டுவிட்டு அதைச்சொன்ன ஊடகங்கள் மீது கோபப்படுவது நியாயமா? உங்களுடைய குடும்பத்தினர்தானே தமிழ்நாட்டில் ஊடக சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்கள்? நானும் ஒரு பத்திரிகையாளன் தான் என்று அடிகடி மார்தட்டி கொள்ளும் நீங்கள் இப்படி கூறலாமா..?
இதற்கு ஊடகங்கள் என்ன செய்ய முடியும் ..? அவர்கள் தொழில் அது. நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் மைய அரசு தரும் தகவல்களைத்தான் அவர்கள் வெளியிடுகிறார்கள். ஆதாரத்தை அள்ளித்தரும் அந்த நபர்களை நீங்கள் கண்டு கொள்ளாதது ஏன்? நீரா ராடியா உரையாடல்களை பதிவை செய்தது யார்? அது எந்தத் துறை?அந்த ஒலிநாடாக்களை வெளியிட்டது யார்?அது எந்தத் துறை? இதை உங்கள் ஊடகங்களால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லையா? உங்களுக்குத் தெரியாமலா இவ்வளவும் நடந்தது? முடிந்தால் இருந்தால் அதக் கண்டுபிடித்து உங்கள் குடும்ப டீவியில் ஒளிபரப்புங்களேன், தெரிந்து கொள்ள எங்களுக்கு ஆசையாக இருக்கிறது.